புதன், 21 நவம்பர், 2012

A.R.முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் தாணுவின் பிரம்மாண்டத் தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் "துப்பாக்கி".ராணுவத்திலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊரான மும்பைக்கு வரும் விஜய்க்கு எதிர்பாராத விதமாக மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருக்கும் தீவிரவாதிகள் பற்றி தெரியவருகிறது. விஜய் எப்படி தீவிரவாதிகளின் சதிசெயல்களை முறியடித்து மும்பை மக்களை காப்பாற்றி வில்லனை வெற்றி கொள்கிறார் என்பதே "துப்பாக்கி" திரைபடத்தின் கதை..

கதையை படித்ததும் " யோவ்! இத தான்யா விஜய்காந்த் ரொம்ப நாளா பண்ணாரு.." னு நீங்க கேக்கலாம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தமிழில் பேசியே கொல்லுவார். விஜய் ஹிந்தியில் பேசி அப்புறம் கொல்கிறார். இதனால் சாவது என்னமோ நாம் தான். 

விஜய் கொடுத்த வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார். நடிப்பிலும் சற்று மெருகேறியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் வழக்கம் போல நன்றாகவே செய்திருகிறார். சில காட்சிகளில் ஸ்டைலாகவும்  தெரிகிறார் ஆடை வடிவைமைப்பாளர் உதவியால். காஜல் மிக அழகாக இருக்கிறார். ஆனால் மிக குறைவான காட்சிகளே. அதிலும் லூசு பெண்ணாகவே வருகிறார். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணி குரல் சற்றும் பொருந்தவில்லை. சத்யன் மற்றும் ஜெயராம் இருவரும் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்கள். வில்லனாக வரும் வித்யுத் நன்றாக செய்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் படத்தின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறது. சில காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு அதை மறக்கடிக்கிறது.


சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு ரிச்னெஸ் கொடுத்திருக்கிறது. சண்டை காட்சிகள் ரசிக்கும் படி படமாக்கபட்டிருக்கின்றன. பாடல் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருப்பினும் தேவை இல்லாத இடங்களில் வருவதால் இடை செருகலாகவே தெரிகின்றன.ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் எத்தனை படங்களுக்கு அவரின் முந்தைய படங்களின் பாடல்களையே கொடுப்பார் என்று தெரியவில்லை.படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பல காட்சிகள் இது ஹீரோ படமல்ல இயக்குனரின் படமென சொல்லாமல் சொல்கிறது. ஏழாம் அறிவில் சற்று சறுக்கிய முருகதாஸ் துப்பாக்கி படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்து விட்டார். 

விஜய் இது போன்ற விறுவிறுப்பான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் அசைக்க முடியாத ஒரு நிலையான இடத்தை பிடிப்பார் என்பது உறுதி. ஆகமொத்தம் துப்பாக்கி ஒரு பக்கா action entertainer.

Posted on பிற்பகல் 8:29 by Elaya Raja

1 comment

வியாழன், 15 நவம்பர், 2012

புது வருட காலண்டர் வந்ததும் எல்லாரும் முதல பாக்குறது தீபாவளி எப்பனு தான். குழந்தைங்க புது சட்டையும் பட்டாசும் கிடைக்கும்னு பாப்பாங்க. வேலை பாக்குறவங்க லீவ் எத்தன நாள் கிடைக்கும்னு பாப்பாங்க. குடும்பத்தலைவிகள் பலகார சீட்டு போடணும்னு பாப்பாங்க. இப்படி எல்லா தரப்பினரக்கும் ஒரு முக்கியமான நாளா தீபாவளி வருஷா வருஷம் இருந்துட்டு வருது. அந்த வரிசையில இந்த வருஷம் வந்த தீபாவளி எப்படி இருந்தது...??தீபாவளினா எல்லாருக்கும் முதல ஞாபகம் வரது பட்டாசு தான். அந்த பட்டாசு தயாரிப்புல ஒவ்வொரு வருசமும் விபத்துகள் சகஜமா நடக்குது. இந்த வருஷம் சிவகாசில நடந்த வெடி விபத்துல 52 பேர் இறந்து போனாங்க. லைசென்ஸ் முடிஞ்சி போன அந்த கம்பெனி மூலமா இந்த வருசத்தோட ஒரு பெரிய விபத்து தமிழ்நாடுல அங்க நடந்தது. இந்த விபத்தால லைசென்ஸ் இல்லாத நிறைய கம்பெனிகள் மூடப்பட்டதால இந்த வருஷம் பட்டாசு விலையெல்லாம் ரொம்ப ஜாஸ்தியாவே இருந்தது. ஆனாலும் காச கரியாக்க ரெடியா இருந்த எல்லாரும் விலைய பத்தி எல்லாம் கவலைபடாம வெடிச்சி தள்ளிட்டாங்க. சில இடங்கள்ல பட்டாசு வெடிச்சதுல விபத்துக்கள் நடந்திருக்கு.

அடுத்தது நம்ம குடிமகன்கள். இவங்களுக்கு தீபாவளினா சரக்கு மட்டும் தான். போன வருஷம் 180 கோடி வசூல் பாத்த நம்ம கவர்ன்மென்ட். இந்த வருஷம் 270 கோடி வசூல் பாத்திருக்காங்க. குடிமகன்கள் சரக்கு கிடைக்காம ஏமாந்து போக கூடாதுன்னு ஸ்டாக் நிறைய இறக்குமதி பண்ணிருக்காங்க. இந்த முன்னேர்பாட்டைஎல்லம் கவர்மென்ட் மத்த துறைகள்யும் காட்டினா கொஞ்சம் நல்லா இருக்கும். ஆக மொத்தம் நம்ம குடிமகன்கள பொறுத்த வரைக்கும் இந்த வருட தீபாவளி ஒரு சிறந்த தீபாவளி.

அடுத்தது சினிமா ரசிகர்கள். இந்த வருட தீபாவளிக்கு மூன்று படங்கள். இதுல பெரிய பட்ஜெட் படம் துப்பாக்கி. படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் தான் வருது. இந்த படத்துக்கு நிறைய பேருக்கு டிக்கெட் கிடைக்காம சிம்பு நடிச்ச போடா போடி போயிருக்காங்க. அப்படி போடா போடி போய்ட்டு வந்து என் நன்பன் ஒருத்தன் பைத்தியம் பிடிச்சி ரோட்ல திரியுறான். இது ஒவ்வொரு வருசமும்  நடக்குற விஷயம் தான். அம்மாவின் கைபேசி வழக்கம் போல தங்கர் பச்சானின் உணர்வு பூர்வமான படம் தான்(நான் இன்னும் எந்த படமும் பாக்கல  பாஸ்).

ஆக மொத்தம் இந்த வருட தீபாவளியும் வழக்கமான தீபாவளி போன்று மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் பாரபட்சம் பாக்காம எல்லாருக்கும் கொடுத்துட்டு போயிருக்கு. இதே போல ஒரு மகிழ்ச்சியான தீபாவளிய அடுத்த வருசமும் எதிர்பார்த்து காத்திருப்போம்..

Posted on முற்பகல் 4:05 by Elaya Raja

No comments

புதன், 7 நவம்பர், 2012

தீபாவளி என்றால் பட்டாசு, புது ஆடை, வகை வகையான இனிப்புகள் என்பதை போல தவிர்க்க முடியாத இன்னொன்று அன்று ரிலீசாகும் புது படங்கள். சிலருக்கு அன்று எதாவது ஒரு புது படத்தை பார்த்தால் மட்டுமே தீபாவளி கொண்டாடியது போல இருக்கும். அந்த அளவிற்கு திரைப்படங்கள் நம் பண்டிகை நாட்களை தன் வசம் வைத்திருக்கிறது. முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் 5 அல்லது 6 திரைப்படங்கள் வரும். அந்த காலம் எல்லாம் போய் இன்று 2 படங்கள் வந்தாலே பெரிது என்றாகிவிட்டது. காரணம் தியேட்டர் பற்றர்க்குறை. ஒரு படத்தையே பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்து முதல் ஒரு வாரத்திற்குள் கல்லா கட்ட நினைக்கிறார்கள் தியேட்டர் அதிபர்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும். விளைவு படம் ரிலீசான பத்தே நாட்களில் பாதி தியேட்டர்களில் இருந்து ஓடி விடும்.இந்த புதிய டிரண்டில் இந்த வருட தீபாவளிக்கு ரிலீசாகும் திரைப்படங்கள்: துப்பாக்கி, போடா போடி, அம்மாவின் கைபேசி.. இழுப்பறியில் இருந்த தீபாவளி லிஸ்ட் படங்களில் சில படங்கள் கழண்டு கொள்ள இறுதியாக இந்த மூன்று படங்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று படங்கள் பற்றிய சிறு முன்னோட்டம்..

துப்பாக்கி:
விஜய் - முருகதாஸ் - சந்தோஷ் சிவன் - தாணு என்று பெரும் புள்ளிகள் ஒன்று சேர்ந்துள்ளதால் படத்திற்கு  எதிர்ப்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. ராணுவ வீரன் சம்மந்த பட்ட கதை என்பதால் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. 


விஜய் ரசிகர்களை துப்பாக்கி முழுத்திருப்தி படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.முருகதாஸ் படங்களில் ஏழாம்  அறிவு மட்டுமே கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அது தவிர்த்து மற்ற அனைத்தும் வெற்றி படங்களே என்பதால் முருகதாஸ் ஏழாம் அறிவில் விட்ட இடத்தை துப்பாக்கி படத்தின் மூலம் பிடிப்பார் என்று நம்பலாம். 

போடா போடி:
நீண்ட நாட்களாய் தயாரிப்பில் இருந்த படம். சிம்புவை மட்டுமே தன் அடையாளாமாய் கொண்டு வரும் படம். முழுக்க முழுக்க பிரெஷ் டீம். சரத்குமார் மகள் வரலக்ஷ்மி தான் படத்தின் நாயகி. சிம்புவின் நண்பரே இயக்குனர். பாடல்கள் ஹிட்டாகி உள்ளதால் படம் பற்றிய எதிர்ப்பார்ப்பு ஏறி உள்ளது. துப்பாக்கி தவிர்த்து வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாததால் படத்திருக்குன்டான வெற்றி வாய்ப்பு கணிசமாக உள்ளது. விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புவிற்கு வேறு வெற்றி படங்களே அமையவில்லை. போடா போடி சிம்புவிற்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மாவின் கைபேசி: 
பள்ளிகூடத்திற்கு பிறகு தங்கர் பச்சன் இயக்கிய களவாடிய பொழுதுகள் இன்னும் ரிலீசாகத நிலையில் தன் அடுத்த படத்தை இயக்கி வெளீட்டிர்க்கு தயாராக வைத்துள்ள படம் தான் அம்மாவின் கைபேசி. அழகி படத்திற்கு பிறகு தங்கர் பச்சன் இயக்கிய அனைத்து படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றதே தவிர வியாபார ரீதியாக அழகி தவிர எந்த படமும் ஓடவில்லை. இருப்பினும் நல்ல கதைகளை மட்டுமே படம் எடுப்பேன் என்ற தங்கர் பச்சனின் கொள்கைக்கு கொஞ்சமும் பங்கம் ஏற்படுத்தாத படமாகத்தான் அம்மாவின் கைபேசி வந்துள்ளதாம். நல்ல விமர்சனங்களை தாண்டி வியாபார ரீதியாக படம் வெற்றி பெறுமா என்பதை தீபாவளி வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Posted on முற்பகல் 4:27 by Elaya Raja

No comments

செவ்வாய், 6 நவம்பர், 2012

சமீபகால படங்களில் வித்தியாசமான முயற்சியோடு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம்.. நிச்சியமாக இது ஒரு நல்ல முயற்சியே.. படம் முடிந்து நாம் யோசிக்கும் போது சாதாரண கதையே என்று தோன்றும்.. ஆனால் அதை ரசிக்கும் படி சொல்லி இருக்கும் விதத்தில் வெற்றி பெற்றிக்கிறது பீட்சா டீம்..!

பீட்சா கடையில் வேலை பார்க்கும் ஹீரோ தான் காதலிக்கும் பெண்ணோடு லிவிங் டுகெதர் முறையில்  வாழ்கிறான்.. பேய் நாவல் எழுதும் முயற்சியில் இருக்கும் ஹீரோயின் பேய் கதைகளை சொல்லி ஹீரோவை  பயமுறுத்தி வைத்திருக்கிறாள் .. இது போதாது என்று பேய் பிடித்த தன் முதலாளியின் மகளை அவரது வீட்டில் கண்டு பயம் கொள்கிறான் ஹீரோ... இது போன்ற சுழலில் பீட்சா டெலிவரி செய்ய போகும் ஒரு வீட்டுக்குள் தனி ஆளாய் மாட்டிகொண்டு அவன் எதிர்கொள்ளும் அமானுசியங்களும் அந்த அமானுசியங்களுக்கு உண்டான விடையுமே பீட்சா...


ஹீரோ ஹீரோயின் இடையிலான காதல் காட்சிகள் புதுமையாக இருந்த போதும் ஒரு உயிர்ப்பே இல்லாத போன்ற உணர்வு... ஒன்றும் இல்லாத காட்சிகளை கூட அழகான வசனங்கள் மட்டுமே  ரசிக்க வைக்கின்றன.. உதாரணமாக  அந்த வயதான முதியவரிடம் கடை ஊழியர் ஆர்டர் எடுக்கும் போது வரும் வசனங்களும் ஹீரோ தன் சாகக்களோடு தண்ணி அடிக்கும் போது வரும் வசனங்களும் ரசிக்கும் படி இருக்கின்றன... முதல் முப்பது நிமிட காட்சிகள் தேமே என்று போனாலும் ஹீரோ அந்த பூட்டிய வீட்டுக்குள் மாட்டிகொண்ட பின்பு காட்சிகள் ரெக்கை கட்டிகொள்கின்றன... கிட்டத்தட்ட நாற்ப்பது நிமிட காட்சிகள் ஹீரோவும் டார்ச் லைட் மட்டுமே.. ஆனாலும் நம்மை போர் அடிக்காத வண்ணம் காட்சிகள் அமைக்கபட்டிருக்கின்றன... ஒளிப்பதுவும் பின்னணி இசையும் பீட்சா வை தூக்கிப்பிடித்திருக்கின்றன... 

ஒரு வேலை இப்படி இருக்குமோ ஒரு வேலை அப்படி இருக்குமோ என்று யோசிக்க வைத்து கடைசியில் நாம் கொஞ்சம் கூட யோசிக்காத வண்ணம் படத்தை முடித்திருப்பதே அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இன் வெற்றி எனலாம்...  ஒரு குத்து பாட்டு இல்ல ஒரு fight இல்ல எவளோ ஏன் நம்ம சந்தானம் கூட இல்ல ஆனாலும் படம் நம்மை போர் அடிக்காம கொடுத்த காசுக்கு முழு திருப்தி கொடுத்திருக்கு.. Well done Pizza team...!!

Posted on முற்பகல் 6:38 by Elaya Raja

No comments