ஆகஸ்ட் 15 - எத்தனையோ இந்தியர்கள் அரும்பாடுபட்டு பெற்றுக் கொடுத்த ஒரு வெற்றி தினம்.. அடிமைத் தீயில் வெந்து உழன்ற இந்தியர்கள் இதயங்களில் மகழ்ச்சி ஊற்றினை பெருகச் செய்த தினம்.. ஆனால் இன்றைய தலைமுறையினரைப் பொறுத்தமட்டில் இது அவர்களுக்கு இன்னும் ஒரு விடுமுறை நாள் என்ற அளவில் மட்டுமே அறியப்படுகிறது. அவர்களின் சுதந்திரத் தினம், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் புதுப்படங்களிலும், நடிகர் நடிகைகளின் நேர்காணலின் மூலம் மட்டுமே கொண்டாடப்படுகிறது...!

தண்ணீரின் அருமை தாகத்தின் போதுதான் புரியும். அதனால்தானோ என்னவோ இன்றைய தலைமுறையினருக்கு இந்த தினம் வெறும் விடுமுறை நாள் என்ற அளவோடு முடிந்துவிட்டது. அதன் பின்னால் புதைந்து கிடக்கும் பல தியாகிகளின் ரணங்களும், வலியும் அவர்களின் கவனம் பெறாமல் கரைந்து போய் விட்டன. காந்தியை இன்று எல்லோரும் நினைவில் வைத்திருப்பதே அவரின் படம் பணத்தில் இருப்பதால்தான். இல்லையேல் அவரும் என்றோ மறக்கடிக்கப்பட்டிருப்பார். 


ஆங்கிலேயர்கள் நமக்கு பூட்டி இருந்த அடிமை விலங்கை உடைத்தெறிந்துவிட்டு நமக்கு நாமே அடிமை விலங்கை பூட்டிக் கொண்டு வாழ்கிறோம். எத்தனையோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் நம் முன்னோர்கள் நமக்கு பெற்றுக் கொடுத்த சுதந்திரம் அர்த்தம் இழந்து விட்டது. கிரிக்கெட்டில் கோப்பை வெல்லும் போதும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் போதும் மட்டும் "என் தேசம், என் நாடு" என்று பெருமைபட்டு கொள்கிறோம். 

இன்றைய சூழ்நிலையில் சுதந்திரம், தேசப்பற்று இதைப்பற்றியெல்லாம் பேசுபவன் பைத்தியக்காரனாய் மட்டுமே பார்க்கப்படுகிறான். இங்கே நான் எழுதும் எழுத்துக்கள் கூட எத்தனையோ ஏளனங்களை சந்திக்கத்தான் போகின்றன. என்ன செய்வது.. நம்மை நாமே ஏளனம் செய்து கொள்ளும் நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

பழமை வாய்ந்த நம் பாரத நாட்டை ஏழை நாடு, ஏழை நாடு என்று இழிவுபடுத்துகின்றனர்.. கஜானாவில் பணம் இல்லை என்று கூறிகொண்டே ஸ்விஸ் வங்கியில் பணத்தை பதுக்கி வருகின்றனர் நம் நாட்டு ஊழல் பெருச்சாளிகள்.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்ற வாசகம் எத்தனை உண்மை.. இன்றைய தேதியில் ஏமாற்றத் தெரிந்தவனே பிழைக்கத் தெரிந்தவன் என்றாகி விட்டது.

ஆகமொத்தம், இன்று அரசியல் ஒரு தொழிலாய் மாறிவிட்டது. எனவே சுதந்திர தினமும் ஒரு விடுமுறை நாளாய் மட்டும் பார்க்கப்படுவதில் ஒன்றும் தவறில்லை..

வாழ்க பாரதம்....??