செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

* தலைமுறை பல தாண்டியும் தன்னிலை மாறாத 
  எம் தமிழன்னையே...!
* காலமெனும் ஓடையில் கரைந்து போன 
  பல பழமைகளுக்கு இடையிலும் 
  உன் பளபளப்பு இன்னும் குறையவில்லையே...!!
* கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கு 
  முன் தோன்றிய உன்னில் கருத்தரிக்க 
  நாங்கள் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்...!!
* உன்னை உச்சரிக்கும் பொழுது நாவில் எழும் 
  தித்திப்பை மிஞ்சும் இனிப்புப்பண்டமும் 
  உண்டோ வேறெங்கும்..!!
* உன்னோடு காதலாகிதான் எம் முன்னோர்கள் 
  அளித்துச் சென்றார்கள்   சில 
  நல்லொழுக்க இலக்கியங்களை...!!
* தன்னை நாடும் வறியவர்க்கு 
  வாழ்வளிக்கும் வள்ளல் நீ..!
  ஆனால் சகட்டு மேனிக்கு சிலர்
  பிதற்றுகிறார்கள் இங்கே..!!
* அழிந்து வருகிறாயாம் நீ...!!
  கரைந்து போகிறதாம் உன் சிறப்பு...!!
  எத்தனை மூடத் தனம் வேண்டும்
  இதனை உரைப்பதற்கு...!!
* இன்றும் உன்னில் கவிதை பேசினால் 
  கைதட்டல்கள் வானைப் பிளக்கும்...!!
  கூட்டம் மயிர்கூச்செறியும்...!!
* அயல் மொழி வந்துவிட்டால் 
  எங்கள் உயிர்மொழி நீ 
  இறந்து விடுவாயா என்ன..?
* காலத்தால் நீ நிச்சயம் மாறப்போவதில்லை..
  ஆனால் காலத்தை மாற்றிக்காட்டியவள் நீ..!!
  உன் கம்பீரத்தின் நிழலில் தான் நாங்கள் எல்லோரும்...!!
* எங்கும் நீயே...!! எங்கள் தமிழ் தாயே...!!

Posted on முற்பகல் 6:48 by Elaya Raja

1 comment

வியாழன், 16 ஆகஸ்ட், 2012ஆகஸ்ட் 15 - எத்தனையோ இந்தியர்கள் அரும்பாடுபட்டு பெற்றுக் கொடுத்த ஒரு வெற்றி தினம்.. அடிமைத் தீயில் வெந்து உழன்ற இந்தியர்கள் இதயங்களில் மகழ்ச்சி ஊற்றினை பெருகச் செய்த தினம்.. ஆனால் இன்றைய தலைமுறையினரைப் பொறுத்தமட்டில் இது அவர்களுக்கு இன்னும் ஒரு விடுமுறை நாள் என்ற அளவில் மட்டுமே அறியப்படுகிறது. அவர்களின் சுதந்திரத் தினம், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் புதுப்படங்களிலும், நடிகர் நடிகைகளின் நேர்காணலின் மூலம் மட்டுமே கொண்டாடப்படுகிறது...!

தண்ணீரின் அருமை தாகத்தின் போதுதான் புரியும். அதனால்தானோ என்னவோ இன்றைய தலைமுறையினருக்கு இந்த தினம் வெறும் விடுமுறை நாள் என்ற அளவோடு முடிந்துவிட்டது. அதன் பின்னால் புதைந்து கிடக்கும் பல தியாகிகளின் ரணங்களும், வலியும் அவர்களின் கவனம் பெறாமல் கரைந்து போய் விட்டன. காந்தியை இன்று எல்லோரும் நினைவில் வைத்திருப்பதே அவரின் படம் பணத்தில் இருப்பதால்தான். இல்லையேல் அவரும் என்றோ மறக்கடிக்கப்பட்டிருப்பார். 


ஆங்கிலேயர்கள் நமக்கு பூட்டி இருந்த அடிமை விலங்கை உடைத்தெறிந்துவிட்டு நமக்கு நாமே அடிமை விலங்கை பூட்டிக் கொண்டு வாழ்கிறோம். எத்தனையோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் நம் முன்னோர்கள் நமக்கு பெற்றுக் கொடுத்த சுதந்திரம் அர்த்தம் இழந்து விட்டது. கிரிக்கெட்டில் கோப்பை வெல்லும் போதும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் போதும் மட்டும் "என் தேசம், என் நாடு" என்று பெருமைபட்டு கொள்கிறோம். 

இன்றைய சூழ்நிலையில் சுதந்திரம், தேசப்பற்று இதைப்பற்றியெல்லாம் பேசுபவன் பைத்தியக்காரனாய் மட்டுமே பார்க்கப்படுகிறான். இங்கே நான் எழுதும் எழுத்துக்கள் கூட எத்தனையோ ஏளனங்களை சந்திக்கத்தான் போகின்றன. என்ன செய்வது.. நம்மை நாமே ஏளனம் செய்து கொள்ளும் நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

பழமை வாய்ந்த நம் பாரத நாட்டை ஏழை நாடு, ஏழை நாடு என்று இழிவுபடுத்துகின்றனர்.. கஜானாவில் பணம் இல்லை என்று கூறிகொண்டே ஸ்விஸ் வங்கியில் பணத்தை பதுக்கி வருகின்றனர் நம் நாட்டு ஊழல் பெருச்சாளிகள்.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்ற வாசகம் எத்தனை உண்மை.. இன்றைய தேதியில் ஏமாற்றத் தெரிந்தவனே பிழைக்கத் தெரிந்தவன் என்றாகி விட்டது.

ஆகமொத்தம், இன்று அரசியல் ஒரு தொழிலாய் மாறிவிட்டது. எனவே சுதந்திர தினமும் ஒரு விடுமுறை நாளாய் மட்டும் பார்க்கப்படுவதில் ஒன்றும் தவறில்லை..

வாழ்க பாரதம்....??

Posted on முற்பகல் 5:49 by Elaya Raja

No comments

புதன், 8 ஆகஸ்ட், 2012"பழையன கழிதலும் புதியன புகுதலும்" எல்லா துறைகளிலும் வரவேற்க்கவேண்டிய ஒன்று. அதற்காக புகழ் பெற்ற பழைய ஒன்றை புதுசாக்குறேன் என்று கொச்சைப்படுத்தக் கூடாதல்லவா..? அதை தான் இன்று செய்து கொண்டிருக்கிறது நம் தமிழ் சினிமா உலகம்..!!

சூடாய் உணவு சமைத்து சாப்பிடும் போது இருக்கும் சுவைக்கும்  பழைய உணவை சூடுபடுத்தி சாப்பிடும் போது இருக்கும் சுவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.  பாடல்களில் ஆரம்பித்த இந்த ரீமேக் கலாச்சாரம் இன்று படங்களையும் ரீமேக் செய்ய உக்குவித்திருக்கிறது. பழைய படங்களின் தலைப்பை கூட விடமாட்டேன் என்கிறார்கள் நம்மவர்கள். 

வித்தியாசமான கதையமைப்பில் ஒரு திரைப்படம் வந்து வெற்றி அடைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு அதே போன்ற கதையமைப்பில் பல கோடிகளை விரயம் செய்து குப்பை படங்களாய் எடுத்துத் தள்ளி விடுவார்கள் நம் தமிழ் திரை உலகினர். நான் இதற்க்கு முந்தைய பதிவில் கூறியது போல திரையில் சொல்ல படாத நம் கதைகள் இன்னும் எத்தனையோ உள்ளன. ( அதுக்காக "உங்கிட்ட கதை இருந்த சொல்லுனு" கேக்காதிங்க...!)

ரீமேக் கலாச்சாரத்தின் ஆரம்பம் நன்றாகவே அமைந்தது. ரீமேக் பாடல்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு தான் படங்களையும் ரீமேக் செய்ய திரைத்துறையினரை துண்டியது.  ரீமேக் பாடல்களில் இப்பொழுதெல்லாம் டப்பாக்கள் உருளும் சத்தங்கள் மட்டுமே கேட்கின்றன. ஸ்ரீகாந்த் தேவா என்னும் இசை சக்கரவர்த்தி இசை கருவிகளால் பழைய பாடல்களுக்கு சமாதி எழுப்பி வருகிறார்.  ரீமேக் பாடல்கள் இப்படி என்றால் ரீமேக் படங்கள் இன்னும் மோசம். 

முதல் ரீமேக் படங்களான "நான் அவன் இல்லை" "பில்லா" படங்களின் வெற்றியே ரீமேக் மோகத்தை இன்னும் அதிகப்படுத்தியது. ஆனால் இரண்டும் எல்லை இல்லா கவர்ச்சியாலும் stylish making ஆகியவற்றால்  மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதை மறந்து விட்டு ரீமேக் செய்கிறேன் என்று மொத்த கதையையும் மாற்றி துவைத்து தும்சம் செய்கிறார்கள் அந்த வெற்றி படங்களை. மாப்பிளை, முரட்டுக் காளை என்று காமெடி லிஸ்ட் இல் சேர்வதற்கு நாம் இன்றும் ரசித்து பார்க்கும் வெள்ளி விழா கண்ட பல திரைப்படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. 

தமிழ் சினிமா உலகில் தலை விரித்தாடும் கதை பஞ்சத்திற்கு என்று தான் நம் படைப்பாளிகள் ஜடை பின்னி பூ வைப்பார்கள் என்று பார்ப்போம்..

அதுவரைக்கும் இந்த ரீமேக் டார்ச்சரை பொறுத்துக் கொள்ளுங்கள் மக்களே..!

Posted on முற்பகல் 2:08 by Elaya Raja

No comments

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

வெறும் பிரம்மாண்டமும் ஹீரோவின்  நட்சத்திர அந்தஸ்த்தும் மட்டும் ஒரு திரைபடத்தை வெற்றி படம்மாக்க முடியாது என்பதை நிருபித்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் தான் பில்லா 2....  படமாக்கும் நேர்த்தியில் எடுத்துக்கொண்ட சிரத்தையை படக்குழுவினர் படத்தின் கதையில் எடுத்துக்கொள்ளவில்லை. "king of opening" என்று ரசிகர்களாலும் தியேட்டர் அதிபர்களாலும் அழைக்கப்படும் "அஜித்" என்ற ஒற்றை வரி மந்திரத்தால் மட்டுமே திரைப்படம் இரண்டு வாரங்கள் மட்டுமாவது தியேட்டரில் இருக்க முடிந்தது. 
தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்து வருகிறது என எண்ணும் போதெல்லாம் இது போன்ற திரைப்படங்கள் நம் எண்ணைதை பொய்யாக்கி விடுகிறது. இன்னும் எத்தனையோ நம் மண் சார்ந்த கதைகளும் நம் மக்கள் சார்ந்த கதைகளும் திரையில் சொல்லபடாமல் இருக்கும் பொழுது எதற்காக சினிமா உலகம் இது போன்ற கற்பனை கலந்த வன்முறையால் நம்மை சித்திரவதை செய்கின்றன என்று புரியவில்லை.
காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை Star value கொண்டு ஏமாற்றும் வித்தையை தான் செய்ய முற்பட்டிருகிறது இந்த திரைப்படம்.  மக்கள் நல்ல படங்களை ஆதரிக்க தவறிவிடுகிறார்கள் என ரசிகர்கள் மீது பழி சுமத்தும் திரை உலகினர் இது போன்ற திரைப்படங்களால் ரசிகனின் ரசிப்புத்தன்மையை நசுக்கத் துணிகிறார்கள். 
கல்லா கட்ட நினைத்து இவர்கள் செய்த பில்லா நல்லா இல்லை என்ற விமர்சனத்தையே எதிர் கொண்டு வருகிறது. 
2012இன் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படம் என்ற அந்தஸ்த்தை பெற்ற திரைப்படம் என்ற எண்ணத்தோடு படம் பார்த்து விட்டு வெளியில் வந்தால் நம் இதழ்களில் சிரிப்பே மிஞ்சுகிறது....!!

Posted on முற்பகல் 6:19 by Elaya Raja

2 comments