ஞாயிறு, 20 ஜனவரி, 2019

**Spoiler Alert**

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கும் ஊர் திருவிழாவில் எல்லோரும் தம்பதிகளாக, குடும்பமாக இருக்க அஜித் மற்றும் தனி ஆளாக இருக்கிறார். அதைப் பார்த்து வருத்தப்படும் அவரது உறவினர்கள், அவரைப் பிரிந்து மும்பையில் வாழும் மனைவியையும், மகளையும் அழைத்து வரும்படி வற்புறுத்த ரோபோ ஷங்கர், தம்பி ராமையா துணையோடு மும்பை பயணப்படுகிறார் அஜித். பயணத்தின் போது பிளாஷ்பேக் விரிகிறது. அரிசி மண்டி வைத்திருக்கும் தூக்குதுரையாக அஜித், அடிதடி, பஞ்சாயத்து என்று ஊருக்குள் அலப்பறை செய்து கொண்டு திரிகிறார். ஊருக்கு மருத்துவ முகாம் நடத்த தன் குழுவோடு அந்த ஊருக்குள் வருகிறார் நயன்தாரா. அறிமுகத்திலேயே அஜித்தின் அடிதடி கண்டு அவர் மீது போலீசில் புகார் செய்ய நயனின் தைரியம் பிடித்துப் போகிறது அஜித்துக்கு. நயனின் மருத்துவ முகாமுக்கு காசு கேட்டு தொந்தரவு செய்யும் லோக்கல் கும்பலை விரட்டி விட்டு, தன் அரிசி மண்டி இருக்கும் இடத்திலேயே முகாமை நடத்திக் கொள்ளும்படி கூறுகிறார் அஜித். அப்படியே இருவருக்குமிடையே சொல்லிக் கொள்ளாத காதல் துளிர்க்கிறது. முகாமை முடித்து நயனை வழி அனுப்பி வைக்கிறார் அஜித். ஆனால் தன் அப்பாவோடு வந்து நயன் மாப்பிள்ளை கேட்க ‘படிக்காத நான் எப்படி உங்களுக்கு பொருத்தமா இருப்பேன்’ என அஜித் தயங்குகிறார். நயனின் உறுதியைப் பார்த்து பிறகு சம்மதிக்க திருமணம் நடந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். வெளிநாட்டில் படிப்பதற்கான இடம் கிடைத்தும் அந்நேரத்தில் தான் கர்ப்பம் தரித்திருப்பது தெரிந்ததும் படிக்கும் ஆசையை துறந்து அக்மார்க் தமிழ் அம்மாவாக மாறுகிறார் நயன். பிள்ளை பிறந்தும் ஊருக்குள் அடிதடி, பஞ்சாயத்து என சுற்றுவது கண்டு அவ்வபோது அஜித் மீது கோபம் கொள்கிறார் நயன். எதிர்பாராத சந்தர்ப்பத்தில் குழந்தை தன்னோடு இருக்கும் போது ஏற்படும் அடிதடியில் குழந்தைக்கு அடிபட இனி உன்னோடு வாழ்ந்து பிள்ளையின் உயிர்க்கு ஆபத்து ஏற்ப்பட வேண்டாம் என கூறிவிட்டு பிரிந்து செல்கிறார் நயன். தன்னையும், குழந்தையும் மீண்டும் பார்க்க முயற்சித்தால் தான் இறந்து போவதாகவும் மிரட்டிவிட்டு செல்கிறார். பத்து வருடங்கள் கழித்து கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பதற்காக செல்லும் அஜித், தன் மகளை ஒரு கும்பல் கொலை செய்ய முயல்வதை தடுத்து நிறுத்துகிறார். ஓட்ட பந்தயத்தில் கலந்து ஜெயிக்க வேண்டும் என்ற தன் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நயனின் அனுமதியோடு தான் யார் என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஒரு பாதுக்கப்பாளானாக மகளின் அருகில் இருக்கத் தொடங்குகிறார்? அஜித் மகளை கொல்ல முயல்வது யார்? ஏன்? மகளின் ஆசையை அஜித் நிறைவேற்றினாரா? மனைவி மற்றும் குழந்தையோடு மீண்டும் சேர்ந்தாரா? என்ற கேள்விகளுக்கு பதிலோடு சுபம் போடுகிறது விஸ்வாசம்.


ரொம்ப ரொம்ப சிம்பிளான கதை. அதை எந்த சிக்கலும் இல்லாமல் சொல்ல முயற்சித்திருப்பது தான் விஸ்வாசம் படத்தின் பலம். பண்டிகை விடுமுறையில் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற விதமாக முகம் சுழிக்க வைக்காத நகைச்சுவை, கொஞ்சம் அதிகமான அப்பா-மகள் செண்டிமெண்ட், கொண்டாட்டமான பாடல்கள் என்று பக்காவாக பார்த்து பார்த்து U சர்டிபிகேட் படமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஜாலியாக ஊருக்குள் அலப்பறை செய்து கொண்டு திரியும் அஜித் நயனிடம் செய்யும் சேட்டைகள் தான் முதல் பாதியின் முக்கால்வாசி. ஜெயிலுக்குள் உட்கார்ந்து கொண்டு சொந்த பந்தங்களோடு சீட்டு விளையாடுவது, மயக்க மருந்தின் வீரியத்தில் நயனின் அழகை வர்ணிப்பது, மறுநாள் தான் செய்தது தெரிந்ததும் பதறி ஓடுவது, ரோபோ சங்கரிடம் கேட்டு கேட்டு இங்கிலீஷ் பேசுவது என அஜித்தும் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபு கூட்டணியும் சேர்ந்த காட்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக முதல் பாதியின் நகைச்சுவை காட்சிகள் சிரிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் நம் பொறுமையை சோதிப்பது என்னவோ நிஜம். சில காட்சிகளில் அஜித் மிகப் பரிதாபமாகவே தெரிந்தார். “‘தல’ உனக்கு காமெடி செட் ஆகல தல” என மனதுக்குள் முனுமுனுக்கும்படி சில காட்சிகளில் செயற்கைத்தனம் அதிகமாக இருந்தது. ஆனால் இடைவேளை வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் மழையில் நடக்கும் சண்டைக்காட்சி ஆறுதலாக இருந்தது. தன் மகளின் உயிருக்கு ஆபத்து என தெரிந்ததும் மகளை ஆஸ்திரேலியா அனுப்ப நயன் நினைப்பதும், ஆனால் நடக்கவிருக்கும் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டுமென்ற மகளின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக, ஒரு ‘பாடிகார்டாக’ மகளின் அருகில் இருக்க அஜித் வேண்டுவதுமென, ‘மாஸ்’ என்ற தளத்தில் இருந்து செண்டிமெண்ட் நிறைந்த டிராமா என்ற தளத்திற்கு படம் மாறுகிறது. கொஞ்சம் சீரியல் டைப் தான் என்றாலும் அஜித் – அனிக்கா இருவரின் நடிப்பும், நீண்ட நாட்களுக்குப் பிறகான விவேக்கின் காமெடியும், படத்தை பார்க்க வைக்கின்றன.

செண்டிமெண்ட் தான் முக்கியம் என்பதாலோ என்னவோ வில்லனை படு பலவீனமாக எழுதியிருக்கிறார்கள். ‘ஜெயிப்பவர்களுக்கே வாழ்க்கை.. தோற்பவர்களுக்கு மரணமே’ என்ற தாரக மந்திரத்தோடு மகளை வளர்க்கும் NO 1 பிசினஸ்மேன் ஜெகபதி பாபு, தன் மகள் தற்கொலை செய்து கொல்ல அனிக்கா தான் காரணம் என சொல்லி அவரைக் கொல்ல முயல்வது வில்லன்னாலே ‘லூசுத் தனமா’ தான் இருக்கனுமா என யோசிக்க வைத்தது. ‘அட போங்கடா’ என சோர்ந்து போகும் போதெல்லாம் டாய்லேட்டில் நடக்கும் பைட், டீக்கடையில் வைத்து ஜெகபதி பாபுவை எச்சரித்து அனுப்பும் காட்சி, கண்ணானே கண்ணே லீட் காட்சி என சுவாரசியம் கொடுத்தது படம். பழக்கதோஷம் என்பது போல் சில அபத்தமான காட்சிகளும் அங்கங்கே ஆஜர் ஆகிக் கொண்டே வந்தன. மிகப்பெரும் தொழிலதிபர், எப்போதும் பாடிகார்ட்ஸ் சகிதம் வலம் வரும் பிசினஸ்மேன் ஜெகபதி பாபு, கிளைமாக்ஸ் என்பதற்காக அஜித்தோடு ‘சிங்கள்ஸ்’ செய்வதெல்லாம் தமிழ் சினிமாவில் சகஜம். கடைசியாக வாட்ஸ்-அப்பில் அனுப்புவது போல் ஆடியன்ஸ்க்கு அப்படியே மெசேஜ் ஒப்பிப்பதெல்லாம் சீரியலுக்கே டப் கொடுக்கும் காட்சிகள்.

அஜித்தின் மாஸ் என்பதாக இல்லாமல் அப்பா – மகள் உணர்வினை முன் நிறுத்தியமைக்காக விஸ்வாசம் ஓகே ரகம்.

Posted on முற்பகல் 7:27 by Elayaraja Subramanian

No comments


** Spoiler Alert**

“பேட்ட” பற்றிய எனது பார்வையை பகிர்ந்து கொள்வதற்கு முன், படம் பார்க்காதவர்களுக்காக ஒரு முறை கதையை கூறிவிடுகிறேன்.
முதல் காட்சியில் பூட்டிய ஒரு பெரிய அறையில் மாணவர்கள் அடைக்கபட்டிருக்க இன்னொரு அறைக்குள் ரஜினி ரௌடிகள் சிலரை புரட்டி எடுக்கிறார். சண்டைக்காட்சி முடிந்ததும் சில மாதங்களுக்கு முன்பு என பிளாஷ்பேக் விரிகிறது. ஊட்டியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியின் ஹாஸ்டல் (தற்காலிக) வார்டனாக மந்திரியின் சிபாரிசின் பேரில் வந்து சேருகிறார் காளி என்கிற ரஜினி. பதவி ஏற்றுக் கொண்ட முதல் நாளே, வசதியான வீட்டுப் பிள்ளையான பாபி சிம்ஹா முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செய்யும் ராகிங் கொடுமைகளை அடக்கி பாபி சிம்ஹாவின் பகைக்கும், மற்ற விடுதி மாணவர்களின் அன்பிற்கும் சொந்தக்காரர் ஆகிறார். பிறகு ஹாஸ்டல் முழுவதும் அவரது சாம்ராஜ்யம் தான். இதனால் கோபமாகும் பாபி சிம்ஹா அப்பாவின் பேச்சைக் கேட்டு கொஞ்சம் அடங்கிப் போகிறார். அங்கே முதலாம் ஆண்டு மாணவியாக வரும் மேகா ஆகாஷின் மீது ஆசைப்படுகிறார். ஆனால் முதலாம் ஆண்டு மாணவனான சனந்த் ரெட்டி - மேகா ஆகாஷ் இருவரும் ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரின் காதலுக்கும் உதவ மேகா ஆகாஷின் அம்மாவான சிம்ரனை சந்திக்கும் ரஜினி, விவாகரத்து ஆன அவரை சைட் அடிக்க சிம்ரனும் ரஜினியை சைட் அடிக்கிறார். பிள்ளைகள் ஒரு பக்கம் காதலிக்க, சிம்ரனும் ரஜினியும் ஒரு பக்கம் காதலிக்க (அ) சைட் அடிக்க (அ) ஏதோ ஒன்று செய்கிறார்கள். மேகா ஆகாஷ் - சனந்த் ரெட்டி இருவரையும் சீண்டும் பாபி சிம்ஹாவை ரஜினி அடித்து அனுப்ப ரஜினியை அடிக்க பாபி சிம்ஹா அவருடைய ஆட்களோடு இரவு ஹாஸ்டலுக்குள் நுழைகிறார். ஆனால் அங்கே இன்னொரு கும்பல் ரஜினியையும், சனந்த் ரெட்டியையும் கொல்ல முயல சண்டை போட்டு தடுக்கிறார் ரஜினி. இருவரையும் கொல்ல வந்தது யார்? ரஜினி யார்? அவருக்கும் சனந்த் ரெட்டிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பதில்.


அர்ஜுன், ரீமாசென், வடிவேலு நடிப்பில் சுந்தர் C இயக்கிய “கிரி” படத்தின் கதை தான். அர்ஜுனுக்கு பதிலாக ரஜினி, பிரகாஷ்ராஜ்க்கு பதிலாக சசிக்குமார், ரீமாசென் பதிலாக சிம்ரன், வடிவேலுக்கு பதிலாக முனீஸ்காந்த், தேவயானிக்கு பதிலாக மாளவிகா மேனன். இதிலெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. கதையா முக்கியம்? சுவாரசியமான காட்சிகள் தானே முக்கியம்? அதில் தான் எனக்கு பேட்ட படத்தின் மீது புகார்.

ரஜினி அறிமுகமானதும் ராகிங் செய்பவர்களை டீல் செய்யும் காட்சி அருமை. துரு துருப்பான, சேட்டை செய்தபடி இருக்கும் பழைய ரஜினியை நினைவுபடுத்தியது. ரசித்துப் பார்த்தேன். அடுத்து ஹாஸ்டல் சாப்பாட்டு பிரச்சனையை சரி செய்கிறார் ரஜினி. சூப்பர். அடுத்து மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி காதலுக்காக சிம்ரனை சந்திக்கிறார். இந்த எபிசொட் முழுக்க எனக்கு பிரச்சனை தான். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிப்பதற்கான எந்த உணர்வு பூர்வமான காட்சிகளும் இல்லை. ரஜினியோட பொண்டாட்டி இறந்து போய்டாங்க. சிம்ரன் விவாகரத்து பண்ணிட்டாங்க. இது போதுமா இருவரும் காதலிக்க? சரி. “இளமை திரும்புதே”ன்னு ஒரு பாட்டும், சிம்ரன் கால்ஷீட்டும் வாங்கியாச்சி அதுக்காக இருக்கட்டும்னு தான் விடத் தோணுது. ரஜினி – சிம்ரன் எபிசொட் முழுக்க ரொம்ப செயற்கைத்தனம். அப்புறம் பாபி சிம்ஹா மற்றும் அவருடைய அப்பாவான “ஆடுகளம்” நரேன் உடனான மோதல், அதனை தொடர்ந்து வரும் சண்டை, பாபி சிம்ஹா ஆட்கள் இல்லாமல் இன்னொரு கும்பல் நுழைவது, விஜய் சேதுபதி மற்றும் மந்திரி அனுப்பும் ஆட்களோடு ஹாஸ்டலுக்கு வெளியே காத்திருந்து அடித்து நொறுக்கும் ரஜினி என முதல் பாதி ஆஹா ஓஹோ ரகம் இல்லையென்றாலும் குறையென்று (சிம்ரன் போர்ஷன் தவிர்த்து) பெரிதாக ஒன்றுமில்லை.

இரண்டாம் பாதி தான் மொத்த பங்கம். கிடா மீசையுடன் சசிக்குமார் நண்பனாக, மதுரையை பூர்வீகமாக கொண்டு ‘பேட்ட’ வேலனாக வரும் ரஜினி கெட்-அப்பில் கவர்ந்தாலும் போக போக கொட்டாவி விட வைக்கிறார். அவர் செய்யும் எதுவும் பெரிதாக சுவாரசியமோ, ‘செம்ம’ என்பதாகவோ இல்லாமல் வெறுமனே தன் பாட்டுக்கு போகிறது. சசிக்குமார் காதலிக்கும் மாளவிகா மேனனின் இரண்டாவது அண்ணனாக வரும் நவாசுதீன் சித்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ஸ் சுத்தமாக செட் ஆகாமல் தனியாக துருத்திக் கொண்டிருக்கிறது. மாளவிகா மேனனின் முதல் அண்ணனைக் கொல்லும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் ‘கொலை பண்றதும், அதுல இருந்து வெளிய வர்றதும் அவ்ளோ ஈஸியா?’ என என்னும் படியாக அமைக்கபட்டிருப்பது ஒரு சமூகத்தின் அங்கமாக, ஒரு படைப்பாளியாக கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் பொறுப்புணர்வின் மீது கேள்வி எழுப்புகிறது. சசிக்குமார், திரிஷா, ரஜினியின் மகன் என அனைவரும் நவாசுதின் வைக்கும் வெடிகுண்டில் இறந்து போகும் போது எந்த விதமான உணர்வையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை. அத்தனை செயற்கைத்தனம் அந்த காட்சியில் தெரிந்தது. சும்மா கொன்று விடுவேன் என மிரட்டியதற்காவே, அந்த நிமிடமே ஊர் பார்க்க துப்பாக்கி எடுத்து சுட்டு தள்ளும் ‘பேட்ட’, தன் உயிர் நண்பனையும், தன் குடும்பத்தையும் அழித்த சிங்காரம் எங்கே இருக்கிறான், என்ன செய்து கொண்டிருக்கிறான், பட்டபகலில், பொது மக்கள் பார்க்க, வெடிகுண்டு வைத்தும், துப்பாக்கிகள் சகிதமும் கொலை செய்யும் அளவிற்கு சிங்காரத்திற்கு தைரியமும், சக்தியும் எப்படி வந்தது? என்று எதுவும் செய்யாமல் ‘இத்தனை நாள் போனா போகுதுன்னு விட்டேன்’ என கதை விடுவது ஏன்? ஏன் சனந்த் ரெட்டி ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதே சிங்காரத்தை கொல்லாமல் விட்டார்?

ஸ்ப்பா.. முடியல..

இது போல எண்ணிலடங்கா கேள்விகள் அடுக்கடுக்காக மனதுக்குள் எழுந்து கொண்டே இருக்கும்படியான சுவாரசியமற்ற காட்சிகள் எண்டு கார்டு போடும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தன. கிளைமாக்ஸ்ல் வில்லன் வீட்டில் PubG கேம் விளையாடி விட்டு ராமாயணம் கதை சொல்லி சூழ்ச்சி பண்றதுல தப்பே இல்ல என்று சப்பைக்கட்டு கட்டிவிட்டு ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டுக்கு நடனமாடும் போது ரஜினி தான் எனக்கு வில்லனாக தெரிந்தார். அந்த நொடியே எனக்கு கொஞ்சமாக கிடைத்த rajinified-ம் வற்றிப் போனது.

பேட்ட படத்தில் பழைய ரஜினி கிடைத்திருக்கலாம் ஆனால் பழைய கார்த்திக் சுப்புராஜ் காணாமல் போனார்.


Posted on முற்பகல் 7:20 by Elayaraja Subramanian

No comments

திங்கள், 19 நவம்பர், 2018

எஸ்.ராமகிருஷ்ணனின் "உறுபசி" நாவல் வாசித்தேன். சம்பத் என்பவனின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். அவனது மரணம் அவனோடு கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த அழகர், ராமதுரை, மாரியப்பன் என்ற மூன்று நண்பர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. சம்பத்தின் மனைவி ஜெயந்தி. சம்பத் கல்லூரியில் காதலித்த பெண் யாழினி. ஓவ்வொருவரின் பார்வையின் வழியே சம்பத் என்ற கதாப்பாத்திரம் வாசகனுக்கு விவரிக்கப்படுகிறது. முதலில் "லூஸா" இருப்பானோ என்பதை போல நம்மை யோசிக்க வைக்கும் அந்த கதாப்பாத்திரம் பக்கங்கள் செல்ல செல்ல நமக்குள் ஒருவித சுவராசியத்தையும் வாசகனின் உள்ளத்தில் இரக்கத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ் பிரிவில் முதல் வருடம் எந்த பெண்களும் சேராமல் இருந்து இராண்டாம் வருடத்தில் ஒற்றை தென்றலாக வந்து சேருகிறாள் யாழினி. யாழினியின் அப்பா கடவுள் மறுப்பு கொள்கைகள் கொண்டவர். யாழினியின் நட்பு சம்பத்தையும் கடவுள் மறுப்பாளனாக மாற்ற கடவுள் மறுப்பு கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலமும் கல்லூரியில் கலகக்காரனாக இருப்பதன் மூலமும் வாழ்க்கை தடம் புரள்கிறது. கல்லூரிக்கு முழுக்கு போடுகிறான், கூட்டங்களில் கலந்து கொள்ள பணம் வாங்குகிறான், வாங்கிய பணத்தில் குடித்து குடித்து குடிக்கு அடிமையாகிறான், கிடைக்கும் வேலைகளுக்கு அவ்வப்போது செல்கிறான், அதை பல காரணங்கள் சொல்லி கைவிடுகிறான், லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக்கி கொள்கிறான், அதன் மூலம் அறிமுகமான ஜெயந்தியை 42 வது வயதில் திருமணம் செய்து கொள்கிறான், வேலைக்கு செல்வதும் பிறகு ஏதேனும் காரணங்கள் சொல்லி கைவிடுவதுமாக இருக்கிறான், முடிவில் இறந்து போகிறான். சம்பத் கதாப்பாத்திரம் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என நாம் எரிச்சல் கொள்ளும் போது அதற்கான தொடக்கபுள்ளியாக அவனது சிறுவயது சம்பவம் ஒன்றினை அவனது நண்பன் மாரியப்பனிடம் சம்பத் கதாப்பாத்திரம் சொல்லும். அது சம்பத்தின் மீது இரக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். ஆனாலும் என்னை நாவலில் மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம் சம்பத்தின் மனைவி ஜெயந்தி. தாயில்லாமல் வீட்டு வேலை செய்து அவள் மீது  அக்கரையற்ற அப்பாவோடு வாழ்ந்து வருகிறாள் ஜெயந்தி. வேலை விஷயமாக கேரளா செல்லும் அவளது அப்பா 25 வயது பெண்ணை மறுமணம் செய்து கொண்டு வந்து பகல்களில் கூட உடலுறவு கொண்டிருக்க அந்த அருவருப்பான சூழ்நிலையை தவிர்க்க காலையிலிருந்து இரவு வரை ஒரு லாட்சிற்கு கீழே இருக்கும் டெலிபோன் பூத்திற்கு வேலைக்கு செல்கிறாள். அந்த லாட்சில் அடிக்கடி தங்கும் சம்பத் அவளோடு பேசி நட்பாக அவனது வித்தியாசமான செய்கைகள் அவளுக்கும் பிடித்துப் போகிறது. ஒரு நாள் திடீரென என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக்கெட்டு அவள் சம்மதமென மறுநாளே சொல்ல அடுத்த 1 மணி நேரத்தில் மாலை மாற்றி தாலி கட்டி வீட்டில் சொல்லிக் கொள்ள விருப்பமில்லை எனக் கூறி அவனோடு சேர்ந்து கிளம்புகிறாள். அதன் பிறகு எப்போதும் அவனோடு சண்டையோ, அவன் மீது வெறுப்போ, அவன் செய்கைகளின் மீது சந்தேகமோ கொள்ளாமல் அவன் கூடவே எல்லா இடங்களுக்கும் மறுபேச்சில்லாமல் பயணிக்கிறாள். அவன் நோய்வாய்ப்பட்டு மரணத்தின் தருவாயில் மருத்துவமனையில் கிடக்கும் போதும் உடனிருக்கிறாள். அந்த கதாப்பாத்திரத்தின் சகிப்புத்தன்மை எல்லையற்றதாக இருந்தது.


நினைத்ததை செய்து கொண்டு எந்த வரைமுறைகளுக்குள்ளும் சிக்காமல், வாழ்க்கை ஓட்டத்தில் ஒரு இறகை போல சம்பத் போன்று நம்மில் பலர் இருக்க கூடும். அவர்களுக்கு நாம் "அப்நார்மல்" என்ற பெயர் வைத்திருக்கிறோம். காரணம் அவர்கள், பிறந்து பெற்றோர் சொல்படி கேட்டு பள்ளி, கல்லூரிகளை முடித்துவிட்டு கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகத்திற்கு சென்று பெற்றோர் சம்மதத்தோடு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெற்று அவர்களையும் தன்னைப் போலவே இந்த சமூகத்தில் உலவவிடும் வேலையை சிறப்பாக செய்துவிட்டு நிம்மதியாக செத்துப்போக வேண்டும் என்ற வழக்கமான வரைமுறைகளை மீறுபவர்கள். சம்பத்தை நாவலில் புரிந்து கொள்ள முயல்வதை போல நிஜ வாழ்வில் உலவும் சம்பத்துகளை நாம் புரிந்து கொள்ள தவறிவிடுகிறோம்.

எஸ்.ராமகிருஷ்ணன் தான் ஒரு தேர்ந்த கதைசொல்லி என்பதை நாவலின் ஒவ்வொருபக்கத்திலும் நிரூபித்துக் கொண்டே செல்கிறார். விறுவிறுப்பான திருப்பங்களும் முடிச்சிகளும் இல்லாமல் சம்பத் என்ற கதாபாத்திரத்தின் வழியே சுவாரசியமான வாழ்க்கை விசாரணையை நடத்திச் செல்கிறார்.

Posted on முற்பகல் 6:45 by Elayaraja Subramanian

No comments

சனி, 13 அக்டோபர், 2018


“எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. I love you” அப்டின்னு அந்த பொண்ணு சொல்லும் போது எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. மொத தடவயா ஒரு பொண்ணு எங்கிட்ட வந்து இந்த வார்த்தைய சொல்றா. ஆனா மொத மொறையா எங்கிட்ட ப்ரொபோஸ் பண்ற ஒரு பொண்ணுக்கு “நோ” சொல்ல வேண்டிய நெலமை. “நோ” சொன்னதுக்காக அந்த பொண்ணு ஏதோ மொக்கையா இருந்திருக்குமோன்னு நினைக்காதிங்க. 5 அடி உயரம். மாநெரத்துக்கு கொஞ்சம் மேல. விரிச்சி போட்டாலும், கலச்சி போட்டாலும், முடிச்சி(?) போட்டாலும் (நன்றி ரைமிங் கிங் : டி.ஆர்) அழகா இருக்குற நீளமான முடி. அளவான மூக்கு, அழகான உதடு, அப்றம் சரி போதும்ன்னு நினைக்கிறேன். இப்டி மாஞ்சி மாஞ்சி வர்ணிக்குற அளவுக்கு அழகு தான் அந்த பொண்ணு. ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே லவ்வுக்கும் எனக்கும் பல கிலோமீட்டர் தூரம் தான். வாங்க ஒரு பிளாஷ்பேக் போய்ட்டு வந்துரலாம். நான் மூணாவது படிக்கும் போது, இவளோ “பேக்”(back) வேணாம்ல? கரெக்ட்டு. எனக்கும் போரடிக்குது. இப்போ பாருங்க.

நான் பனிரெண்டாவது படிக்கும் போது டம்மியா தான் இருந்தேன் (இப்பவும் தானேன்னு கேக்காதீங்க.) பாடம் எடுக்க கிளாஸ்க்கு ஸார் யாரும் வரலன்னா பின்னாடி இருக்குற பெஞ்ச் பசங்க செம்ம குஷியாகிடுவானுங்க. பொண்ணுங்க மேல பேப்பர் ராக்கெட் விட்டு வம்பிழுக்கிறது, கலாய்க்குறதுன்னு என்னன்னவோ பண்ணுவானுங்க. ஆனா முன்னாடி பெஞ்ச்ல இருக்குற நான் பக்கத்துல உக்காந்துட்டு இருக்குற பசங்க கூட சேந்து “புக் கிரிக்கெட்” விளையாடிட்டு இருப்பேன். நீங்க விளையாடியிருக்கீங்களா? “புக் கிரிக்கெட்” அப்டினா என்னன்னு தெரியலனா சொல்றேன் கேளுங்க. ஒரு புக் எடுத்துக்கணும் (*நெறைய பேஜ் உள்ள பெரிய புக்). விளையாடுறவங்க பேஜ ஓபன் பண்ணி அதுல 2,4,6 அப்டின்னு ரெட்டைப்படை நம்பர் வந்தா அதெல்லாம் அவங்க எடுக்குற ரன். ௦ வந்தா அவுட். உதாரணத்துக்கு பேஜ் நம்பர் 124 வந்தா நாலு தான் அவனோட ஸ்கோர். அதுவே 90 அப்டின்னு ‘௦’ ல முடியுற நம்பர் வந்தா அவுட். ‘8’ல முடியுற நம்பர் வந்தா அவன் திரும்பவும் விளையாடனும். இண்ட்ரெஸ்டிங்கா இருக்குல. வீட்டுல இருக்குற யார் கூடயாவது விளையாடிப் பாருங்க. ஹா எங்க விட்டேன். ஹ்ம்ம். அந்த மாதிரி பொண்ணுங்கள கிண்டல் பண்ணிக்கிட்டு கடல போட்டுட்டு இருக்குற பசங்கல “பேட் பாய்ஸ்”டா அப்டின்னு திட்டிட்டு நான் என்ன மாதிரி இருந்த “டம்மி” பசங்க கூட கிரிக்கெட் விளையாடிகிட்டு இருப்பேன். ஆனா இந்த மாதிரி டம்மியா இருந்த எனக்குள்ளயும் ‘96’ படத்துல வர்ற மாதிரி  ஒரு “காதல்” கன்னாபின்னான்னு மொளச்சதுனு சொன்னா சத்தியமா நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். ஆனா ப்ளீஸ் நம்புங்க. உண்மைதான் அது. அந்த பொண்ணு அது உக்காந்துட்டு இருக்குற எடத்துல இருந்து என்னை திரும்பி பாத்து சின்ன வயசு திரிஷா மாதிரி சிரிக்கும். நானும் சின்ன வயசு விஜய் சேதுபதி மாதிரி சிரிப்பேன். அவ சிரிக்க நான் சிரிக்க. நான் சிரிக்க அவ சிரிக்க. அப்டின்னு கண்ணாலயே பேசிட்டு இருந்தோம். ஒரே காதல் பாட்டா பாடிட்டு திரியுவேன். சரியா பாடத் தெரியலனாக்கூட. FLAMES போட்டு பாக்குறது, அந்த பொண்ணு பேர எங்கயாவது பாத்தா சிரிக்குறது, கவித எழுதுறதுன்னு பெரிய romantic guy-ஆ சுத்திட்டு இருந்தேன். எத்தனை நாளைக்கு தான் கண்ணால பேசுறது? சரி. ஒரு பையனா நாம தான்னே சொல்லியாகனும்ன்னு அப்டின்னு முடிவு பண்ணி ஒரு நாள் அவ கிட்ட ப்ரொபோஸ் பண்றதுக்காக அவ டுயுஷன் முடிச்சிட்டு வர வழில வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ரொம்ப நெர்வேஸா இருந்தது. ஆனாலும் இன்னைக்கே சொல்லிடுறதுன்னு ஒரு உறுதியோட நின்னேன். அவ வந்தா. என்னை பாத்ததும் என் பக்கத்துல வந்து சைக்கிள நிறுத்தினா.

அவ : “என்னடா இங்க நிக்குற..?”
என் மனசாட்சி : என்ன இப்படி கேக்குறா?
அவ: சொல்லுடா. என்ன விஷயம்.
என் மனசாட்சி : சரி. வந்துட்ட. சொல்லித்தொல டா.
நான் : அது வந்து.. என்னன்னா.. அது.
அவ : டேய். சீக்கிரம் சொல்லு டா. லேட் ஆகுது.
என் மனசாட்சி : என்ன இவ கிட்ட ஒரு எதிர்பார்ப்பே இல்லயே.
அவ : டேய். என்ன?
நான் : I love you **** (பேர் சொல்ல மாட்டேன். ஏன்னா அவ இப்போ Married & blessed with two babies)
அவ : டேய். என்னடா இப்படி வந்து சொல்ற. உன்னை நான் எப்பவும் அப்டி நினைச்சதே இல்லடா. உன்ன இத்தன நாளா ஒரு பிரெண்டா தாண்டா பாத்தேன்.
என் மனசாட்சி : ஏது பிரெண்ட்டா தான் பாத்தியா? அப்றம் ஏண்டி என்னை சும்மைக்கும் திரும்பி திரும்பி பாத்து கிளாஸ் ரூம்ல சிரிச்சிட்டு இருந்த?
நான் : Sorry ****.. என்னை மன்னிச்சிடு.
அவ : சரி சரி. இத மறந்துடுவோம். நாம எப்பவும் போல நல்ல பிரெண்ட்ஸ் தான் சரியா?
நான் : சரி ****
அவ : வரட்டுமா?
நான் : ஹ்ம்ம்
சைக்கிள்ல அவ போக அந்த எடத்துலயே நான் நின்னுட்டு இருந்தேன்.
என் மனசாட்சி : அவளோதானா? இதுக்கு தான் இத்தனை நாளா லூசு மாதிரி சுத்திட்டு இருந்தேனா? ச்சே.. உனக்கும் இன்னும் வேணும்டா.. இதுல பீலிங் வேற. கெளம்பு.

நான் என்னமோ விஜய் சேதுபதியா தான் இருந்தேன். ஆனா அவ த்ரிஷாவா இல்லன்னு இப்படி தான் தெரிஞ்சிகிட்டேன்.

அப்புறம். காலேஜ். காலேஜ் லைப்-அ என்னால மறக்கவே முடியாது. அப்படி இப்படின்னு நெறைய பேரு பீலிங்-ஆ பேசுவானுங்க. எனக்கு அப்டி எல்லாம் ஒண்ணுமே இல்ல. அங்கயும் நான் டம்மியா தான் சுத்திட்டு இருந்தேன். கிளாஸ் ரூம்க்கு ‘ஸார்’ யாரும் வரலனா ஸ்கூல்ல “புக் கிரிக்கெட்” விளையாடுனேன். இங்க, பாட்டுக்கு பாட்டு, சினிமா கத பேசுறது அப்டின்னு ஓடும். பத்தாததுக்கு வீட்டுல இருந்து வர பசங்களோட மதிய சாப்பாட புடுங்கி சாப்பிட்டுட்டு இருப்பேன். என் கிளாஸ் ரூம்ல இருந்த சில பொண்ணுங்க பேரு கூட தெரியாத அளவுக்கு தான் காலேஜ்ல பொண்ணுங்களுக்கும் எனக்குமான தொடர்பு இருந்தது. ஒரு பொண்ணுக்கிட்ட எப்டி பேசுறதுனு தெரியாது அப்டிங்கறது தான் உண்மைனாலும் “ச்சே.. பொண்ணுங்க கிட்ட நானா போய் பேசுறதா? அதெல்லாம் எனக்கு தேவையே இல்ல.” இந்த மாதிரி எனக்கு நானே சொல்லிட்டு கெத்தா இருக்குறதா நினைச்சி சுத்திட்டு இருந்தேன். ஆனா இந்த மாதிரி இருக்கும் போது ஒரு பொண்ணு மேல லைட்டா, ரொம்ப மைல்டா ஒரு “லவ்” மாதிரியான பீலிங் வந்தது ஆனா தனியா இருந்த ஒரு நாள் அப்போ “ஸ்கூல்” லவ்வுக்கு ஒரு பிளாஷ்பேக் போயிட்டு வந்தேன். அப்புறம் இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு டம்மியா சுத்துறத கண்டினியு பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

அப்புறம். ஆபிஸ். இங்க மட்டும் என்ன மாறியிருக்க போகுதுன்னு தானே கேக்குறீங்க? அப்டி எல்லாம் நினைக்காதீங்க மக்கா. உண்மைலேயே மாறிடிச்சி. சைட் அடிக்குறது, சைட் அடிக்கும் போது ஒரு பொண்ணு பாத்தா அப்டியே விடாம “அடிச்சி” பாக்குறது அப்டின்னு என் பிரெண்ட்ஸ் ஸ்கூல், காலேஜ்ல பண்ணிட்டு இருந்தத நான் அப்போ தான் பண்ண ஆரம்பிச்சிருந்தேன். சில பொண்ணுங்க கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வரும். சில பொண்ணுங்க “பாக்குறான் பாரு பொறுக்கி பையன்” அப்டிங்கற மாதிரி பாப்பாங்க. “எக்ஸ்க்யூஸ் மீ.. ஸாரி நான் கொஞ்சம் டிசன்ட்டான ஆளு தான்” அப்டின்னு மனசுக்குள்ளயே சொல்லிட்டு அந்த பொண்ண பாக்குறத நானும் நிறுத்திடுவேன். சரி. இவ்ளோ நேரம் கத சொல்லிட்டு வரேன்னே என் பெர்சனாலிட்டி பத்தி சொல்லலே? எங்க அம்மா, “என் பையனுக்கு என்னா எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கான், சூர்யா மாதிரி இருக்கான்” அப்டின்னு அடிக்கடி சொல்லுவாங்க. நான் அத நம்ப மாட்டேன். ஆனா அடிக்கடி கண்ணாடி பாக்கும் போது “அழகன்டா நீ” அப்டின்னு மட்டும் சொல்லிக்குவேன். சரி நாம எவளோ அழகா இருக்கோம்னு தெரிஞ்சிக்கலாம்னு என் க்ளோஸ் பிரெண்ட் ஒருத்தன் கிட்ட கேட்டேன்.

நான் : மச்சான்.. நான் அழகாடா?
என் பிரெண்ட்டு : ஏண்டா திடீர்னு இப்டி கேக்குற?
நான் : சொல்லுடா?
என் பிரெண்ட்டு உனக்கென்னடா அழகுடா நீ
நான் : நெஜமாவா மச்சான்.
என் பிரெண்ட்டு ஆமா டா..
நான் : நூத்துக்கு எவளோ மச்சான் மார்க் தருவ எனக்கு?
என் பிரெண்ட்டு ஒரு முப்பது முப்பத்தஞ்சி தருவேன் மச்சி
நான் : போடா *******
என் பிரெண்ட்டு ஏன்டா
நான் : உங்கிட்ட போய் கேட்டேன் பாரு

எனக்கு தெரியும். அவன் சும்மா வெளயாட்டுக்கு என்ன கிண்டல் பண்றதுக்காக அப்டி சொன்னன்னு. கண்டிப்பா ஒரு 6௦ தரலாம் எனக்கு. அட நம்புங்க. சரி நம்பலனா விடுங்க. நாம மறுபடியும் கதைக்கு வருவோம்.

இந்த மாதிரி பொண்ணுங்க கண்ண மீட் பண்ற அளவுக்கு தைரியம் வந்திருந்த பெறகு கூட சிங்கிளா தான் சுத்திட்டு இருந்தேன். ஆமா. நூத்துல 70 சதவீதம் பொண்ணுங்க ஸ்கூல், காலேஜ் லெவல்லயே கமிட் ஆகிடுறாங்க. மீதி இருக்குறவங்க லவ்ல இண்ட்ரெஸ்ட் இல்ல, வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க, அப்டி இப்டி சொல்லிடுறாங்க. அதாவது யாரையும் நான் அப்ரோச் பன்னால. பட் ஜெனரலா சிங்கிளா இருக்குற சில பொண்ணுங்க சொன்னது இதெல்லாம். அப்டியே சிங்கிளா இருந்தாலும், லவ் பண்றேன்னு எந்த பொண்ணுக்கிட்டயும் சொல்ல தோணவே இல்ல. அதான் சிங்கிள் வாழக்கை கண்டினியு ஆகிட்டே இருந்தது. அந்த மாதிரி ஒரு சமயத்துல தான் அவள பாத்தேன். பாத்த ஒடனே “இவ உனக்குனே பொறந்தவடா” அப்டின்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். ஆனா, நீங்க நினைக்குற மாதிரி ப்ரொபோஸ் பன்னால. பட் டெய்லி வேடிக்கை மட்டும் பாத்துட்டே இருந்தேன். நாள் கணக்கா, வாரக் கணக்கா, மாசக் கணக்கா. ஆனா போய் பேசவே இல்ல. ஏன்னா அவ வேற ப்ராஜெக்ட். எப்டி பேசுறது. என்ன பேசி ஆரம்பிக்கிறது.

“ஹலோ.. நான் தான் உங்கள ரொம்ப நாளா சைட் அடிச்சிட்டு இருக்குற பையன்” - ச்சே.

“ஹலோ.. என் பேரு ராஜா. உங்க பேரு என்ன?” – த்தூ.

“ஹலோ.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. நாம பிரெண்ட்ஸா இருக்கலாமா?” – கண்றாவி.

இந்த மாதிரி பேசி அவகிட்ட மொக்கை வாங்கிட வேணாம்னு தான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன். கடவுள் அந்த பொண்ணுகிட்ட பேசுறதுக்கு நமக்கு ஒரு வாய்ப்ப ஏற்படுத்தி தருவாருன்னு. ஆனா என் ஸ்டேடஸ “சிங்கிள் டூ கமிட்டட்” அப்டின்னு மாத்துறது கடவுளோட high priority லிஸ்ட்ல இல்ல போல. கடைசி வரைக்கும் நான் எதிர்பாத்த வாய்ப்பு கெடைக்கவே இல்ல. ஆனா அன்னைக்கு அந்த பொண்ணு வந்து ப்ரொபோஸ் பண்ணும் போது மனசக் கல்லாக்கிட்டு அந்த பொண்ணுக்கு “நோ” சொன்னேன். அவளோ அழகா இருந்த பொண்ணுக்கு “நோ” சொன்னத நினைச்சி பெருமை படுறதா வருத்தப்படுறதா தெரியல.

அந்த பொண்ணு : ஹாய்.. என் பேரு *****
நான் : ஹாய்.. என் பேரு ராஜா
அந்த பொண்ணு : நான் நேரா வந்த விஷயத்தை சொல்லிடுறேன்..
நான் : சொல்லுங்க..
அந்த பொண்ணு : எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. I love you
நான் : ..................
அந்த பொண்ணு : என்னாச்சி..
நான் : இல்ல..
அந்த பொண்ணு : ஐ ஆம் ஸாரி.. இப்படி வந்து சொல்றதுக்கு. நாம ரெண்டு பேரும் ரொம்ப நாளா ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டே இருந்தோம். ஸோ உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு நினைச்சி தான் வந்து சொன்னேன்.. தப்பா இருந்தா..
நான் : ஐயோ.. இல்லங்க.. எனக்கும் உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது தான்.
அந்த பொண்ணு : ‘பிடிச்சிருந்தது’ னா.. அப்போ இப்போ பிடிக்கலையா?
நான் : இப்பவும் புடிச்சிருக்கு.. பட்..
அந்த பொண்ணு : பட்?
நான் : எனக்கு போன வாரம் தான் மேரேஜ் ஆச்சி..

இப்போ தெரிஞ்சிக்கிட்டிங்களா ஏன் அவளோ அழகான பொண்ணுக்கு “நோ” வேண்டிய நெலமை எனக்கு வந்ததுன்னு. ஆனா இப்போ யாரா இருந்தாலும் எவளோ அழகான பொண்ணா இருந்தாலும் எல்லாருமே “என் பொண்டாட்டிக்கு” அப்புறம் தான். Yes I am married to a world’s most beautiful girl.

The End

Posted on பிற்பகல் 11:43 by Elayaraja Subramanian

No comments

திங்கள், 20 ஆகஸ்ட், 2018


தெருவுக்குள் நான் நுழைந்த போது மணி 10-க்கு மேல் ஆகியிருந்தது. சில வீடுகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்த போதிலும் தெரு மட்டும் கழுவி வைத்ததைப் போல் சுத்தமாக இருந்தது. வார இறுதி நாள் என்பதால் அலுவலக நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு வந்ததில் எப்போது படுக்கையில் விழுவேன் என்ற எண்ணத்துடன் வந்து கொண்டிருந்தேன். கையில் சின்ன பார்சல் ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார். தெரு விளக்கு இல்லாத அந்த இருட்டில் அவர் அப்படி அலைந்து கொண்டிருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாகப்படவே அவரைக் கடந்து செல்ல முற்ப்பட்டவன் நின்றேன்.
“பாட்டி.. என்னாச்சி.. என்ன தேடுறீங்க..?” என்றேன்.
குரல் கேட்டு என்னைப் திரும்பிப் பார்த்தவர் தனக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்தார். பேசாமல் போய் விடலாமா என்ற யோசனை எனக்குள் தோன்றினாலும் இன்னொரு முறைக் கேட்போம் என மீண்டும் கேட்டேன்.
“என்ன பாட்டி தேடுறீங்க..?”
“இல்ல கடைக்கு போகலாம்ன்னு வந்தேன்.. இப்ப வீடு எதுன்னு தெரியல..”
தள்ளாடியபடி முன்னோக்கி நடந்தவர் அந்த அரை இருட்டில் ஏதோ ஒன்றின் மீது கால் இடறி கீழே விழப் போக நான் பிடித்துக் கொண்டேன். என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவர் ஒவ்வொரு வீட்டையும் அந்த வீட்டை ஒட்டி இருக்கும் படிக்கட்டுகளையும் பார்த்துக் கொண்டே வந்தார். ஒரு வீட்டின் முன்னே நின்று சிறிது அவர் யோசிக்கவும்,
“இந்த வீடாப் பாட்டி.. உள்ள போறிங்களா..?” என்றேன்.
இல்ல இந்த வீடு இல்ல.. அது படிக்கட்டு இப்படி இருக்காது..” எனக் கூறிவிட்டு மீண்டும் எங்கு நான் வரும் போது நின்றாரோ அங்கேயே சென்று நின்று கொண்டார். அங்கிருந்து தெரு தொடங்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். நான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்கத் தொடங்கினேன். மறுபடியும் ஒவ்வொரு வீடாக பார்த்தபடியே என் கைகளைப் பிடித்துக் கொண்டு நகரத் தொடங்கினார். ‘பேசாம போயிருக்கலாம்’ என மூளைக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு வீட்டின் அடையாளத்தையும் பார்க்கும் படலம் மீண்டும் 10 நிமிடங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

அந்த தெருவின் முடிவில் தான் நண்பர்களுடன் அறை எடுத்து கடந்த 3 வருடங்களாக நான் தங்கியிருக்கிறேன். இந்த பெண்மணியை ஒரு முறைக் கூட இங்கே தெருவில் பார்த்ததில்லை. எந்த வீட்டைச் சேர்ந்தவர் என்பது சுத்தமாக எனக்கு பிடிபடவில்லை. வேறு யாரேனும் தெருவில் வருகிறார்களா? அப்படி வந்தால் ஒரு வேளை இவரை அடையாளம் தெரியலாம் என நானும் கவனித்துப் பார்த்தேன். யாருமே வருவதாக தெரியவில்லை.
“பாட்டி என் கூட கொஞ்சம் வாங்க..” என அவரை அழைத்துக் கொண்டு முன்னோக்கி நடந்தேன்.
“இங்க தான்பா வீடு இருக்கும்.. மேல மாடி இருக்கும்.. கீழ வீடு..” என முணுமுணுப்பதைப் போல் அவருக்குள்ளேயே பேசிக் கொண்டு என் கைகளைப் பற்றியபடி நடக்கத் தொடங்கினார்.
என் அறைக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டு கேட்டினை தட்டினேன். வெளியே வந்த அந்த வீட்டின் அம்மாள் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
“என்ன தம்பி..” எனக் கேட்டுக் கொண்டே நெருங்கியவர் என் அருகில் நின்ற வயதான பெண்மணியைக் கண்டதும், “இவங்க எங்க இருந்தாங்க..?” என்றார்.
“தெருமுக்குல நின்னுட்டு இருட்டுல அவங்க வீடு தெரியாம திணறிட்டு இருந்தாங்க.. சரி அதான் உங்களுக்கு இவங்கள தெரியுமான்னு கேக்க வந்தேன்..” என்றேன்.
“தெரியும்.. தெரியும்.. எங்க வீட்டுல வேலை செய்யுற பொண்ணோட மாமியார் தான்.. இதோ இங்க தான் வீடு இருக்கு.. பாட்டிமா எங்க போனிங்க இந்த நேரத்துல” என கூறிவிட்டு மூதாட்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்து செல்லத் தொடங்கினார் பக்கத்து வீட்டு அம்மாள்.
‘சரி.. ஒருவேளை எதிர்காலத்தில் மீண்டும் தான் இது போல இரவு நேரம் கழித்து வரும் போது இவர் இப்படி நின்று கொண்டிருந்தால்? அதனால் இவருடன் சென்று வீட்டைத் தெரிந்து கொள்வோம்’ என நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
எங்கள் வீட்டிற்கு எதிரே செல்லும் குறுகிய பாதையில் நெருக்கியப்படி கட்டி வைக்கபட்டிருந்த சில வீடுகளை தாண்டி சென்றவுடன் இருவரும் நின்றார்கள். ஒரு வீட்டை நெருங்கியதும், “ஆஹ்.. இதா இருக்கு வீடு.. இதான் இதான்..” என்றபடியே மூதாட்டி வேகமாக அந்த வீட்டை நெருங்கினார். வீட்டின் கதவைத் தட்டிய பக்கத்து வீட்டு அம்மாள் கதவைத் திறந்த பெண்மணியைப் பார்த்ததும், “பத்மா.. உன் மாமியார் தெருமுக்குல நின்னுட்டு வீடு தெரியாம அல்லாடிக்கிட்டு இருந்துருக்காங்க.. இந்தா நம்ம பக்கத்து வீட்டுல தங்கியிருக்குற இந்த தம்பி தான் பாத்துட்டு கூட்டிட்டு வந்துச்சி..” என்றார்.
“அய்யோ.. நைட் ஷிப்டுக்கு போயிருக்க அந்தாளுக்கு தெரிஞ்சா என்னியத்தான் திட்டுவான் ஏண்டி இந்த நேரத்துல வெளிய வுட்டன்னு.. ஏய் கெழவி.. உள்ள வந்து தொல..” பத்மா என்றழைக்கப்பட்ட பெண் மூதாட்டியின் கைகளைப் பிடித்து வேகமாக வீட்டின் உள்ளே கிட்டத்தட்ட தள்ளினார்.
“அதான் உன் மாமியாருக்கு நிதானம் இருக்க மாட்டேங்குதே ஏன் வெளிய விடுற...?”
“அய்யோ.. நான் எங்கமா வுடுறேன்.. இங்க தான் உக்காந்துட்டு இருந்துச்சி.. எப்போ எங்க போனதுனே தெரியல.. இவ்ளோ நேரமா தேடிட்டு இருந்தேன்..”
மாமியாரைத் திட்டிக் கொண்டிருந்த அந்த பெண்மணியைத் தாண்டி மூதாட்டியைப் பார்க்க முற்பட்டேன். அரை டிராயரோடு நின்றுக் கொண்டிருந்த 7 வயது மதிக்கத்தக்க சிறுவனோடு மூதாட்டி கையில் வைத்திருந்த பார்சலைக் கொடுத்து விட்டு ரகசியம் போல் எதுவோ பேசிக் கொண்டிருந்தார்.
“ஏய்.. கெழட்டு சிறுக்கி.. எங்க போயிருந்த இந்த நேரத்துல..” எனக் கத்தினாள் பத்மா என்ற பெண்மணி.
“புள்ள ஆசையா புரோட்டா சாப்டனும்னு கேட்டான்.. அதான் வாங்க போனேன்..”
“புரோட்டா வாங்க இதுதான் நேரமா..? ஏன் வாங்கித் தர நானும் உன் மவனும் இல்ல?”
“இருக்கீங்க.. ஆனா புள்ளை எங்கிட்ட தானே கேட்டான்..”
“இந்த பேச்சு மசுருக்கு ஒண்ணும் கொறச்சலில்ல.. ஆனா போயிட்டு வீட்டுக்கு தான் கரெக்ட்டா வர தெரியாது..” எனக் கூறிவிட்டு பக்கத்து வீட்டு அம்மாளிடம் புகார் வாசிக்கத் தொடங்கினாள் பத்மா.
“இப்படித்தான்மா.. வயசான காலத்துல சும்மா இல்லாம எங்க உசுர வாங்குது.. பெரிய மவன் வுடு தாம்பரத்துல தான் இருக்கு.. போய் அங்க கொஞ்ச நாள் இருக்கலாம்ல.. எங்க கூட இருந்துட்டு டெய்லி ரோதனையா போச்சி இது கூட..”
“விடு பத்மா.. வயசானவங்க.. அப்படி தான் இருப்பாங்க.. என் மாமியார் கூட..” என இருவரும் சுவாரசியமாகப் பேசத் தொடங்க நான் எட்டி உள்ளே பார்த்தபோது பத்மாவின் வசைகள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத மூதாட்டி பேரக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
நான் திரும்பி என் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரே ஒரு கேள்வி என்னுள் முளைத்தது.
“முதுமை - மீண்டும் குழந்தைப் பருவம் செல்வதற்கான இன்னொரு வாசலோ..?”


Posted on பிற்பகல் 5:02 by Elayaraja Subramanian

No comments

செவ்வாய், 17 ஜூலை, 2018

பல்லவி:
விழியெனும் வில்லால் காதல் தொடுத்தவளே..
மௌனமொழிப்  பேசி இதயம் பறித்தவளே..
மழை கொண்ட மேகமாய் 
வான் வெளி சுற்றித் திரிந்தேன்..
குளிர் தென்றலாய் நீ 
உரசிடப்  பெருந்தூறலாய் பொழிந்தேன்..
துள்ளித்  துள்ளிக் குதிக்கிறேன்..
அடிக்கடி என் பெயர் மறக்கிறேன்..

சரணம் 1:
இரவுகள் உன்னால் நீளுதடி..
கனவுகள் களவுப் போனதடி..
உன் வாசம் கொண்ட காற்று மட்டும் 
சுவாசமாய் என்னுள் நுழையுதடி..
புதிதாய்ப் பிறந்தேன் காதலால்..
உலகம் மறந்தேன் ஆதலால்..

சரணம் 2:
பெண்ணவள் பார்த்ததும் இதயம் 
இறக்கை விரிக்குதே..
என் ஒவ்வொரு செல்லிலும் 
அவள் முகம் சிரிக்குதே..
கால்களும் சாலை மறந்ததே..
காற்றிலும் பாதை வரைந்ததே..
ஓவியப் பெண்ணே ஓடி விடாதே..
என் உலகம் உன் பின்னே மறந்துவிடாதே.. 

Posted on முற்பகல் 11:00 by Elayaraja Subramanian

No comments

திங்கள், 16 ஜூலை, 2018

7 வருடங்களாக இருவரும் எதிரெதிர் வீடு. தன்னை விட மூன்று வயது மூத்தவளான அவளை “அக்கா” என்று அழைக்க அவன் ஒரு நாளும் நினைத்ததில்லை. சந்தேகமே வேண்டாம். அவள் அத்தனை அழகு. விடுமுறை என்றால் அவள் இருக்கும் வீடே கதி எனக் கிடப்பான். அவள் வீட்டில் அவனும் ஒருவனாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அவனின் குறும்பும், துறுத்துறு குணமும் அவள் மனதில் இடம் பிடிக்க அவனுக்கு உதவின.
நெடுநாள் யோசனைக்குப் பின் கல்லூரியில் முதல் ஆண்டு சேர்ந்த பிறகு அவளிடம் தன் விருப்பத்தை கூறினான் அவன். வயது வித்தியாசம் அவளை யோசிக்க வைத்தது. தனக்கும் அவனைப் பிடிக்கும் என்றும் ஆனால் தன்னை விட மூன்று வயது குறைந்தவனை விரும்பும் பெண்ணை வீட்டாரும், உறவினர்களும், சுற்றி இருப்போரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றாள் அவள். முடிவில் அவன் பிடிவாதம் அவளை ஜெயித்தது. ஆனால் அவன் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் வரை இருவர் வீட்டிலும் காதல் விஷயம் தெரிந்து விடக் கூடாது என்பது அவளது நிபந்தனை. அவளுக்கு தெரியாது காதலில் விழுந்தப் பிறகு சுற்றிருப்போர் எவரும் காதலர்களின் கண்களுக்கு தெரியமாட்டார்கள் என்பது.
எதிர் வீட்டுக் காதல் இருவர் வீட்டிலும் தெரிந்தது. சில மாதங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக இருந்த காதல் தடுமாற்றம் கொள்ள ஆரம்பித்தது. அவள் வீட்டில் திருமணத்திற்கு வற்புறுத்தினார்கள். அவன் வீட்டில் சிறு கண்டிப்போடு நிறுத்திக் கொண்டார்கள். அவள் அவனிடம் முடிவைத் தேடும் உரையாடலை ஒரு நாள் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியில் தொடங்கினாள்.
“வீட்ல இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாதுடா.. ஓடிப் போய் கல்யாணம் பண்ணலாம்ன்னு கூப்டாத.. எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்ல.. அதனால நான் வீட்ல சொல்றவன கல்யாணம் பண்ணிக்க போறேன்..”
“என்னடி சொல்ற.. படிப்ப முடிச்சிட்டு அடுத்த வருஷம் வேலைக்கு போய்டுவேண்டி.. அது வரைக்கும் வீட்ல கொஞ்சம் சமாளிச்சிக்கடி..”
“நடக்குறத பேசு.. நான் முன்னயே சொன்ன மாதிரி.. வயசு வித்தியாசம் வேற பிரச்சனையா இருக்கும்.. உங்க வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க.. விட்டுடு.. அவளோதான்..”
இடிந்து போனான் அவன். வீட்டில் அவனது சோகம் குறித்து யாரும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அவளது திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக அவளிடம் சத்தியம் செய்தபடி அவன் போனான். அவள் கண்களில் விழும்படி நின்றான். தாலிக் கட்டி முடித்த நொடி அழுதபடியே வெளியில் வந்தான்.
இனி “இப்படி ஒருத்தி” தன் வாழ்வில் இருந்ததே நினைவில் இருக்கக் கூடாது என நினைத்தான். அவள் குறித்த நியாபகத்தை முழுவதும் அழித்திட வேண்டும் என்ற வெறி அவனுள் அப்போது அதிகம் இருந்தது. அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் அது இந்த கதைக்கு தேவையில்லை என்பதால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

Posted on பிற்பகல் 2:03 by Elayaraja Subramanian

No comments